நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை


நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
x

கோடங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோடங்குடி கிராம விவசாயிகள் சார்பில் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மயிலாடுதுறையை அடுத்த கோடங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்னும் 15 நாட்களில் முன்பட்ட நெல் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் தொடங்கப்பட உள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்பட உள்ள நெல்லை கொள்முதல் செய்ய கோடங்குடி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தார்.

அனுமதியின்றி மண் எடுப்பது குறித்து...

இதேேபால மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் கிராமமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

அகரகீரங்குடி ஊராட்சியில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அய்யனார் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தூர்வாரும் பணி என்ற பெயரில் பொக்லைன் எந்திரம் மூலம் இரவு- பகலாக மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முறையான அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறியும் 20 அடிக்கு மேல் மண் எடுக்கப்பட்டு பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் மண் எடுப்பதற்காக ஆற்றில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இன்றி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

எனவே, விதிமுறைகளை மீறி அய்யனார் குளத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்துவதோடு இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.







Next Story