காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து என்ஜினீயரை தாக்கி விட்டு கடத்தப்பட்ட இளம்பெண்ணை தர்மபுரி போலீசார் மீட்டனர்.
காதல் திருமணம்
தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28). என்ஜினீயர். இவருக்கு கோவையை சேர்ந்த மிதுனா (28) என்ற இளம்பெண் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானார். இவர்களிடையே காதல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு மிதுனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் வெண்ணாம்பட்டியில் உள்ள சரவணகுமாரின் வீட்டிற்கு வந்த மிதுனாவின் உறவினர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் வீட்டில் புகுந்து சரவணகுமாரை தாக்கினர். பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறையில் அவரை அடைத்து விட்டு மிதுனாவை காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து சரவணகுமார் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இளம்பெண் மீட்பு
அதன்பேரில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவுபடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கோவைக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். கோவை அருகே மிதுனாவுடன் காரில் சென்ற உறவினர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் மிதுனாவை கடத்தி சென்றதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து மிதுனாவை மீட்டு கணவர் சரவணகுமாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மிதுனாவின் உறவினர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.