துணைவேந்தர்களை நியமிப்பது மாநில அரசின் உரிமை: சென்னை மாநாட்டில் முதல்-அமைச்சர் பேச்சு


துணைவேந்தர்களை நியமிப்பது மாநில அரசின் உரிமை: சென்னை மாநாட்டில் முதல்-அமைச்சர் பேச்சு
x

‘துணைவேந்தர்களை நியமிப்பது மாநில அரசின் உரிமை’ என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார்.

மாநாட்டுக்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட இயக்கம்

தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்கிறது.

இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒருவருக்கு கல்வியை மட்டும் கொடுத்துவிட்டால், அது மிகப்பெரிய சொத்தாக அமைந்துவிடும். அத்தகைய கல்வி சொத்தை உருவாக்கும் இயக்கமாக, எப்போதும் திராவிட இயக்கம் இருந்துள்ளது. அனைவருக்கும் கல்வி, தகுதிக்கேற்ற வேலை என்பதுதான் திராவிட கொள்கை.

ஒருங்கிணைந்த பாடத்திட்டம்

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாடு 51.4 சதவீதத்துடன் மாணவர்கள் சேர்க்கையில் உயர்ந்து நிற்கிறது.

வளர்ந்துவரும் தொழில்கள் மற்றும் அதற்கு தேவையான திறன்களை வளர்க்கும் பொருட்டு, தொழில் நிறுவனங்களின் முழுபங்கேற்புடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட்டப்படிப்புகளை, உலகத்தரத்திற்கு இணையாக சீரமைத்து, மேம்படுத்தி பாடத்திட்டம், ஆராய்ச்சி மற்றும் புதுமையாக்கலில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த நிதி

உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை தமிழகத்தில் செயல்படுத்தவும், ஆராய்ச்சி மாணவர்களை ஊக்கப்படுத்தவும், ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்கான திட்ட அறிக்கைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு நிபுணர் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அவர்களின் பரிந்துரைப்படி நிதி வழங்கப்படும்.

மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதல்-அமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் தொடங்கப்படும். மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

தொழில்துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய திறன் சார்ந்த பயிற்சி வழங்க ஏதுவாக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 'ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி' வழங்கப்படும்.

பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது. அதேநேரத்தில் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.

சமூகநீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயத்தில், பகுத்தறிவை கூர்மைப்படுத்துவதாக நமது கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும்.

மசோதா

அறிவியல் சிந்தனை கொண்ட சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும் உருவாக்கக்கூடிய கடமையைத்தான் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும்.

நாட்டின் மற்ற மாநிலங்களைவிட நாம் முன்னேற்றம் அடைந்ததற்கும், தனித்து தெரிவதற்கும் இத்தகைய கொள்கை விழுமியங்கள் தான் காரணம்.

ஒன்றிய-மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய 2007-ல் நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரை அடிப்படையில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம்.

அரசின் உரிமை

ஏனென்றால், இது மாநில அரசின் உரிமை தொடர்புடைய பிரச்சினை. மாநிலத்தின் பல்கலைக்கழக கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை.

எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.

பட்டம் வாங்கும் இளைஞர்களை அல்ல, எவரோடும் போட்டியிடும் தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டு கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது. 'நீட்' தேர்வுக்கு எதிராக நாம் இருக்கிறோம். அந்த தேர்வுக்கு பயந்து அதனை நாம் எதிர்க்கவில்லை.

நீட் தேர்வு-புதிய கல்வி கொள்கை

அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது, இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி. இதனால் தான் எதிர்க்கிறோம்.

எந்த படிப்பாக இருந்தாலும், அதனை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும், திட்டமிடுதலும் இருக்க வேண்டும். மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும் அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும்.

அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கிறோம்.

புதிய பாதை

புதிய பாடங்களையும், பட்டப்படிப்புகளையும் கொண்டு வர வேண்டும். புதிய பாதைகளை அமைப்பதாக பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும்.

இந்த ஆட்சி காலத்தை, உயர்கல்வியின் பொற்காலமாக திகழ வைப்பது துணைவேந்தர்களாகிய உங்களது கடமை.

பழமைவாத பிற்போக்கு கருத்துகளை புறந்தள்ளி புதிய அறிவியல் கருத்துகளை ஆக்கப்பூர்வமான, வளமான சிந்தனையை மாணவர்களிடையே வளர்த்து நாட்டுக்கும், எதிர்கால இளைஞர் சமுதாயத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், சிவ.வீ.மெய்யநாதன், திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உள்பட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story