தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலைமறியல்


தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலைமறியல்
x
திருப்பூர்


உடுமலை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், அதையும் தாண்டி திறந்தால் அடித்து நொறுக்குவோம் என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

உடுமலையையடுத்த மைவாடி ஊராட்சிக்குட்பட்ட கே.கே.புதூர் அருகில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று அந்த பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி பிரிவு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். இதனையடுத்து உடுமலை தாசில்தார் கண்ணாமணி, மடத்துக்குளம் தாசில்தார் செல்வி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். எனவே போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

விளை நிலங்கள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தற்போது டாஸ்மாக் கடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் நீரோடை, பொது மயானம், விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.மேலும் எங்கள் ஊருக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படும் நிலையில் பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி பிரிவு பகுதியில் இறங்கி ஊருக்கு நடந்து வரும் நிலை உள்ளது. பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவ்வாறு நடந்து தான் வந்து கொண்டுள்ளனர்.

தற்போது மதுக்கடை திறக்கப்பட உள்ள இடத்தைத் தாண்டித் தான் ஊருக்கு வர வேண்டும்.மதுக்கடை திறக்கப்பட்டால் அங்கு பல பகுதிகளிலிருந்து வரும் குடிமகன்கள் குவிந்து விடுவார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்படும்.மேலும் அந்த பகுதியிலுள்ள விளை நிலங்களில் குடிமகன்கள் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களையும் கவர்களையும் வீசிச்செல்வார்கள்.

இதனால் விவசாயத்தி கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.இந்த பகுதிக்கு அருகில் பல நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்படுகிறது. அங்கு நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்களும் இங்கு குடிக்கத் தொடங்கினால் தொழில் பாதிப்படையும்.பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். குடிப் பழக்கத்தால் பல குடும்பங்கள் சிதைந்து சின்னா பின்னாமாகிறது. அந்த நிலை எங்கள் பகுதியிலுள்ள குடும்பங்களுக்கு வருவதற்கு விட மாட்டோம்.இந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கக் கூடாது என்று பல முறை மனு கொடுத்தும், திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது தாசில்தார் கொடுத்த உறுதிமொழியையும் தாண்டி இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் அடித்து நொறுக்குவோம்.இவ்வாறு பொதுமக்கள் ஆவேசமாகக் கூறினர்.


Next Story