சாலையோரம் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகள்


சாலையோரம் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகள்
x
திருப்பூர்


குமரலிங்கம் பகுதியில் ரோட்டோரங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளால் நீர் வழித் தடங்கள் பாழாகி வருகிறது.

நீராதாரங்கள்

உலகத்தில் உள்ள புல், பூண்டு முதல் மனிதன் வரை அனைத்து விதமான உயிர்களுக்கும் மழை என்பது மிகப் பெரிய வரமாக உள்ளது. மழைநீர் அனைத்து விதமான பயிர்களின் வளர்ச்சிக்கும் உயிர்களின் இருப்புக்கும் கைகொடுக்கிறது.

அதனால்தான் மழைநீரை சேமித்துப் பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்புகளை அனைத்து பகுதிகளிலும் நம் முன்னோர்கள் உருவாக்கினர்.

ஊருணி (ஊரார் குடிப்பதற்கானது), குளம் (குளிக்கப் பயன்படுத்துவது), குட்டை (கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்கானது), ஏரி (ஏர்த்தொழில் செய்வதற்கானது), அணை (பெரு நீர்த் தேக்கம்) என அவற்றின் அளவு மற்றும் பயன்பாட்டுக்குத் தகுந்தபடி நீராதாரங்களை வகைப்படுத்தினர்.மேலும் வீடுகள், வீதிகள் என அனைத்து பகுதிகளிலும் விழும் மழைநீர், நீர்நிலைகளுக்கு சென்று சேரும் வகையில் நீர் வழித்தடங்களை உருவாக்கினர்.

இவ்வாறு ரோட்டோரங்களில் அமைக்கப்பட்ட நீர்வழித் தடங்கள் பலவும் ஆக்கிரமிப்புகளாலும் அலட்சியத்தாலும் வீணாகி வருகின்றன.

விழிப்புணர்வு

அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம் பகுதியில் ரோட்டோரங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளால் நீர்வழித் தடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் வழிந்தோடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நிலை உள்ளது.அத்துடன் அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் சென்று பயிர்களை பாழாக்கும் அபாயம் உள்ளது.

மேலும் மழைநீர் நீர்நிலைகளுக்கு சென்று சேரமுடியாமல் வீணாவதால் குளம், குட்டைகள் வறண்டு போகும் அபாயம் உள்ளது.நீர்வழித் தடங்களின் முக்கியத்துவம் தெரியாமல் ஒருசிலர் செய்யும் இதுபோன்ற செயல்கள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் இதுபோன்று நீர்வழித் தடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி மழைநீர், நீர்நிலைகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

குமரலிங்கம் பகுதியில் மட்டுமல்லாமல் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதே நிலை உள்ளது.

எனவே நீர்வழித் தடங்களைப் பாழாக்குவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்


Next Story