பச்சைமலை அருவியில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி:ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் திடீர் சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு


பச்சைமலை அருவியில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி:ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் திடீர் சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு
x
சேலம்

ஆத்தூர்

பச்சைமலை அருவியில் மூழ்கி 2 வாலிபர்கள் இறந்தது தொடர்பாக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலிபர்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலையில் மங்களம் அருவி உள்ளது. இந்த அருவியில் குளிக்கவும், அப்பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர்கள் தமீம் பாஷா (வயது 23), ஜெஸ்வந்த் (23), விசாந்த் (24). இவர்களுக்கும், திருச்சி மாவட்டம் தா.பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஊட்டியில் இருந்து தா.பேட்டைக்கு காலை காரில் வந்த 3 மாணவர்கள், அந்த இளம்பெண்ணுடன் பச்சைமலையில் உள்ள மங்களம் அருவிக்கு குளிக்க சென்றனர். அங்கு அருவிக்கு செல்லும் பாதையில் இருந்த தடைகளை அகற்றிவிட்டு அவர்கள் குளிக்க சென்றுள்ளனர். மங்களம் அருவியின் தண்ணீர் விழும் தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் ஆழம் தெரியாமல் அவர்கள் குளிப்பதற்காக அருவியையொட்டி உள்ள பகுதியில் இருந்து குதித்ததாக தெரிகிறது.

பிரேத பரிசோதனை

இதில் தமீம் பாஷா, ஜெஸ்வந்த் ஆகியோர் தண்ணீருக்குள் இருந்த பாறையில் மோதி நீரில் மூழ்கி இறந்தனர். விசாந்த் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்ததும் தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய விசாந்த் திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நேற்று இறந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஊட்டியில் இருந்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து திரண்டு நின்றனர். இதற்கிடையே பலியான தமீம் பாஷா, ஜெஸ்வந்த் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நேற்று மதியம் 2.15 மணியளவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு சேலம்- கடலூர் மெயின் ரோட்டில் திடீரென ஆம்புலன்ஸ் வாகனங்களை குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிரேத பரிசோதனை செய்து உடல்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும் இந்த மறியல் போராட்டம் காரணமாக சேலம்- கடலூர் சாலையில் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 3.30 மணி அளவில் பிரேத பரிசோதனை முடிந்து 2 வாலிபர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


Next Story