சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 16 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் ஆசாமிகளுக்கு உதவிய விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அதேபோல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் உடைமைகளை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது துணிகளுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
இந்த நிலையில் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில் இருந்த விமான நிறுவன ஊழியர் ஒருவர், திடீரென புறப்பாடு பகுதியில் வெளியேற முயற்சிப்பதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டனர். அந்த ஊழியரிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். வெளிநாடுகளில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த ஆசாமி, சுங்க இலாகா அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தங்கத்தை விமான நிறுவன ஊழியரிடம் கொடுத்து அதனை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து கொடுக்கும்படி கூறியது தெரிந்தது.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.2 கோடியே 16 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவிய விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.