கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 14), த/பெ.செல்வராஜ், ராகுல்கண்ணன் (வயது 14), த/பெ.இசக்கியப்பன் மற்றும் முகேஷ், (வயது 13) த/பெ.மகாலிங்கம் ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும் நேற்று (15-8-2023) கடற்கரைக்கு குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.