ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேட்டி


ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x

“சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக என்னை இடைநீக்கம் செய்தது தவறான முடிவு” என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்

திருநெல்வேலி

"சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக என்னை இடைநீக்கம் செய்தது தவறான முடிவு" என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மோதல் சம்பவம்

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நேற்று நெல்லை வந்தார். அவர் கொக்கிரகுளம் காங்கிரஸ் அலுவலகம் முன்பு உள்ள காமராஜர், இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதலில் காயம் அடைந்த எனது தொகுதியை சேர்ந்தவர்களை பார்க்க வந்துள்ளேன். சத்தியமூர்த்தி பவன் என்பது காங்கிரஸ் கட்சியினருக்கு கோவில் மாதிரி. அங்கு எனது தொகுதியை சேர்ந்தவர்கள் நியாயமான கோரிக்கைக்காகவே சென்றுள்ளனர். அவர்களை தாக்கியது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து நான் கட்சி தலைவரிடம் விளக்கம் அளித்து உள்ளேன். இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது.

ஒழுங்கு நடவடிக்கை குழு

கட்சியினரை கட்சிகாரர்களே தாக்கமாட்டார்கள். எனவே வெளியாட்களே மோதலில் ஈடுபட்டு இருக்கலாம். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் இன்று (அதாவது நேற்று) எனக்கு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், எனது தொகுதியில் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் வேறு தேதியில் ஆஜராகி எனது விளக்கத்தை அளிப்பதாக கால அவகாசம் கேட்டு உள்ளேன். இதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அலுவலகத்திற்கு பூட்டு

மேலும், நெல்லையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறுைகயில், 'கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் எனது நண்பர். அவர் எனக்காக தேர்தலில் வேலை பார்த்து உள்ளார். நான் வருவது அவருக்கு தெரியாது. இது எங்கள் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை. அதனை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். எந்த பிரச்சினையும் எங்களுக்குள் இருக்காது' என்றார்.

தவறான முடிவு

பின்னர் அவர் களக்காடுக்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'சொந்த தொழிலை கட்சிக்காக விட்டுவிட்டு மக்கள் பணி மற்றும் கட்சி பணியை செய்து வருகிறேன். என்னை இடைநீக்கம் செய்துள்ளதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இது தவறான முடிவு. இதற்காக கட்சி தலைவர்களை குறைசொல்ல விரும்பவில்லை.

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த அவ மரியாதை இல்லை. இந்த பகுதி மக்களுக்கு செய்த அவ மரியாதை. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.

கட்சி என்னை இடைநீக்கம் செய்தாலும் நாங்குநேரி தொகுதி மக்களுக்காக தொடர்ந்து அயராது உழைப்பேன்' என்றார்.


Next Story