தனியார் நிறுவனத்தில் ரூ.4¼ கோடி மோசடி


தனியார் நிறுவனத்தில் ரூ.4¼ கோடி மோசடி
x

கும்பகோணத்தில், தனியார் நிறுவனத்தில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரத்து 600-ஐ மோசடி செய்த கணக்காளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்


கும்பகோணத்தில், தனியார் நிறுவனத்தில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரத்து 600-ஐ மோசடி செய்த கணக்காளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்தில் பங்குதாரர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவதுநான், ஒரு தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக உள்னேன். இந்த நிறுவனத்தில் கும்பகோணம் விவேகானந்தா நகரை சேர்ந்த ராஜ்மோகன்(வயது 51) என்பவர் பல ஆண்டுகளாக கணக்காளராக பணியாற்றினார்.இந்த நிலையில் நான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த ஆண்டு(2021) ஏப்ரல் மாதம் நிறுவனத்திற்கு தெரியாமல் ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்தை கணக்கில் இருந்து ராஜ்மோகன் எடுத்துள்ளார்.

ரூ.4 கோடியே 23 லட்சம் மோசடி

இந்த நிலையில் கணக்கில் முரண்பாடு இருந்ததால் சந்தேகத்தின் பேரில் வங்கி கணக்கு விவரங்களை எனது மகன் சரி பார்த்துள்ளார். அதில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ரூ.4 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரத்து 600-ஐ ராஜ்மோகன் மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் பலமுறை கேட்டும் உரிய பதில் இல்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே ராஜ்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து ராஜ்மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story