ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.

திண்டுக்கல்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் கணினி ஆபரேட்டர்களை பணி வரன்முறை செய்து இளநிலை உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.

இதேபோல் பணிச்சுமை, விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி மாநிலம் முழுவதும் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்தனர்.

விடுப்பு போராட்டம்

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக வளர்ச்சித்துறையில் 670 பேர் நேற்று விடுப்பு எடுத்தனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவை பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்பட பல்வேறு திட்ட பணிகள் தேக்கம் அடைந்தன.

இதற்கிடையே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட பொருளாளர் சந்தியாகு தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story