கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்
விழுப்புரம்
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில்தான் நேரடி வகுப்புகள் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கியதால் மாணவ- மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு 1,152 தொடக்கப்பள்ளிகள், 264 நடுநிலைப்பள்ளிகள், 189 உயர்நிலைப்பள்ளிகள், 201 மேல்நிலைப்பள்ளிகள் என 1,806 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும் மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளை உற்சாகமாகவும், இன்முகத்துடனும் வரவேற்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
வாழை தோரணம்
இதையடுத்து மாணவ- மாணவிகளை வரவேற்க கல்வித்துறை அதிகாரிகளும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களும் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர். பெரும்பாலான அரசு பள்ளிகளின் நுழைவுவாயிலில் மாணவ- மாணவிகளை வரவேற்கும் விதமாக வாழை தோரணங்கள் கட்டப்பட்டு வெல்கம் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற வாசகங்கள் எழுதியவாறு வண்ண கோலமிட்டிருந்தனர்.
மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோர், பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்று மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் சீருடையில் பள்ளிக்கு வந்தனர். ஒரு சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு வந்து பள்ளியில் விட்டுச்சென்றதையும் காண முடிந்தது.
இனிப்பு வழங்கி வரவேற்பு
மாணவ- மாணவிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சாக்லெட், திராட்சை, கமர்கட் போன்ற இனிப்புகளை கொடுத்தும், ரோஜாப்பூ கொடுத்தும் இன்முகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். ஒரு சில பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு சந்தனம், குங்குமம் வைத்தும் ஆசிரியர்கள் வரவேற்றதையும் பார்க்க முடிந்தது. வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு இறைவணக்கத்தில் மாணவ- மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு பின்னர் ஆர்வமுடன் வகுப்புகளுக்கு சென்றனர். பள்ளிகள் திறந்து முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்திற்கான வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்ததால் நேற்று நல்லொழுக்கத்திற்கான வகுப்புகள் நடத்தப்பட்டன.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 20-ந் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 27-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
கலெக்டர் வாழ்த்து
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் மோகன் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் ரோஜாப்பூ வழங்கி வரவேற்று ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவித்து நன்றாக படிக்க வேண்டுமென அறிவுரை கூறி வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்த அவர் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களையும் வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், தலைமை ஆசிரியர் கோவிந்தன், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் ரபிக், கவுன்சிலர் உஷாமோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.