தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றி வருகின்றன- சீமான் குற்றம் சாட்டினார்.
தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றி வருவதாக சீமான் குற்றம் சாட்டினார்.
தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றி வருவதாக சீமான் குற்றம் சாட்டினார்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
வீதிக்கு வந்து போராடுகிறார்கள்
நாம் தமிழர் கட்சி என்பது மாற்றத்திற்கான கட்சி. குறைகளை கேட்க வந்த கட்சி அல்ல தீர்க்க வந்த கட்சி. தமிழகத்தில் தற்போது ஆசிரியர்கள், நர்சுகள், டாக்டர்கள், மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை சிறந்த ஆட்சி என்று சொல்லி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
கையேந்தும் நிலைக்கு...
தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று எல்லோருடைய கனவாக உள்ளது. எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது நினைப்பது நாம் தமிழர் கட்சி. எப்படியாவது ஏமாற்றி ஆள வேண்டும் என்பது நினைப்பது திராவிட கட்சிகள். தமிழின மக்களை சிந்திக்க கூடாது என்பது திராவிட கட்சிகளின் நோக்கம்.
இன்று நிவாரணம் கேட்டு விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும்.
திராவிட கட்சிகள்
தமிழக அரசு, படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1,000, பொங்கல் பரிசு ரூ.1,000 என வழங்கி தமிழக மக்களை அவமதிப்பு செய்து வருகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தற்போது திராவிட மாடல் ஆட்சி வெறும் செய்தி அரசியல் தான் செய்து வருகிறது.
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழக மக்களை திராவிட கட்சிகள் மாறி, மாறி ஏமாற்றி வருகின்றனர். விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து நம் முன்னோர்கள் செய்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் காளிதாசன், மாநில சுற்றுச்சூழல் பிரிவு துணைத் தலைவர் காசிராமன், மாநில மகளிர் அணி நிர்வாகி காசி அம்மாள், சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.