தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு: குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டுக்காக குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சேலம்,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் எல்.கே.ஜி.வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன.
இந்த சட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பள்ளியில் உள்ள இடங்களை விட அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்ததால் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து 25 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் விவரம் அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதாகவும், உடனடியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.