சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 24 Dec 2022 5:05 PM GMT (Updated: 24 Dec 2022 5:06 PM GMT)

ராமர் பாலம் இருந்ததற்கு ஆதாரம் இல்லாததால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திண்டுக்கல்லில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினர்.

திண்டுக்கல்

ராமர் பாலம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

மதவெறி, ஜாதி வெறி, பதவிவெறி போன்றவற்றை தீர்க்கக்கூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் தந்தை பெரியார் இருக்கிறார். அவர், உடலால் வாழ்ந்த காலத்தை விட உணர்வால் நிறைந்த காலமாக, இந்த காலம் விளங்குகிறது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியார் சிலையை கண்டே அஞ்சும் நிலையில் இருக்கின்றனர். பெரியாரின் தத்துவத்தை கண்டு மிரளுகின்றனர்.

சேது சமுத்திர கால்வாய் திட்டம் தென் மாவட்ட மக்கள் பயன்பட கூடிய மிகப்பெரிய திட்டம் ஆகும். இந்த திட்டம் செயல்படுத்தி இருந்தால் தென் மாவட்டங்களில் உள்ள வேலை இல்லாத ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கும். தென் தமிழகம் மிகப்பெரிய அளவுக்கு பயனடைந்து இருக்கும். ஒரு சில பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு கற்பனையாக ராமர் பாலம் இருக்கிறது, அதனை இடிக்க கூடாது என்றனர்.

ஆதாரம் இல்லை

பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திவிட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சம்பந்தப்பட்ட மந்திரி பேசுகையில், ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டார்.

எனவே தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடாது என்பதற்காக சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தி இருக்கின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சேர்ந்து அந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும். மத்திய அரசு அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்காக போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story