தென்பசியார்நாகஅங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழாதிரளான பக்தர்கள் தரிசனம்


தென்பசியார்நாகஅங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழாதிரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

தென்பசியார் நாகஅங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே தென்பசியார் கிராமத்தில் பிரசித்திபெற்ற சுயம்பு நாகஅங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான விழா கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு கோலில் கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மயானக்கொள்ளை

இதனையடுத்து 9 மணிக்கு உற்சவ அம்மனுக்கு அங்காள ரூபம் கொண்டு 16 கை விஸ்வரூப காளி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அம்மன் உட்பிரகாரத்தில் இருந்து மேள, தாளம் முழங்க ஊர்வலமாக மயானத்தை நோக்கி புறப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது வயல்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சுண்டல், கொழுக்கட்டை, நாணயங்கள் ஆகியவற்றை மயானக் கொள்ளையில் வாரி இறைத்தனர். சில பக்தர்கள் அம்மன் வேடமிட்டு நடந்து சென்று ஆசி வழங்கினர். பேய் விரட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது சிலர் ஆவேசத்துடன் ஆடினர்.

இதனைதொடர்ந்து நாகஅங்காளம்மன், 51 அடிஉயர நாககாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சில பெண்கள் குழந்தை வரம் வேண்டி கோவில் முன்பு உள்ள புற்றில் பால் ஊற்றியும் கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தினர். விழாவில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கெஜலட்சுமி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சக்தி உபாசகர் ராம்குமார் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story