தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் -சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை இயல்பைவிடஅதிகம் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"தென்மேற்கு பருவமழை தமிழக மற்றும் புதுவையில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது. எட்டு இடங்களில் கனமழையும் ஒரு இடத்தில் மிக கனமழையும் பெய்துள்ளது.அந்த வகையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி,நாமக்கல்,தர்மபுரி,ஈரோடு, திருப்பூர் ,விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்கள் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100 சதவிகிதத்திற்கும் மழை அளவு பதிவாகியுள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிக சதவீத மழை பதிவாகியுள்ளது குறிப்பாக 1906-ம் ஆண்டில் 112 சென்டிமீட்டரும், 1909-ம் ஆண்டு 127 சென்டிமீட்டரும், 2022-ல் 93 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என கூறினார்.
வடதமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களிலும், செப்டம்பர் 2, 3 ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலையை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மித கனமழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அடுத்த 24 மணி நேரத்தில் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் லேசான மழைதான் பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், கடந்த் ஜூன் 1 ம் முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 40 செ.மீ., இந்த காலக்கட்டத்தின் இயல்பளவு 21 செ.மீ., இது இயல்பைவிட 88 சதவீதம் அதிகம்" என்று தெரிவித்துள்ளார்.