வருகின்ற 15-ந் தேதி முதல் சபரிமலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்


வருகின்ற 15-ந் தேதி முதல் சபரிமலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகின்ற 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதனையொட்டி மதுரை, திண்டுக்கல், பழனி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் செல்கின்றனர்.

இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் மதுரை, திண்டுக்கல், பழனி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து குமுளிக்கு செல்ல வருகின்ற 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. குமுளியில் இருந்து சபரிமலைக்கு செல்ல கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் மூலம் அதிக அளவில் இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மண்டல பூஜை நடைபெறும் 27-ந் தேதி சுமார் 100 பஸ்களும், மகர விளக்கு பூஜைக்காக ஜனவரி 15-ந் தேதி தேவைக்கு ஏற்ப இன்னும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மதுரை, திண்டுக்கல், பழனி, திருச்சி மற்றும் குமுளி ஆகிய பஸ் நிலையங்களில் பக்தர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

கொல்லம், மூணாறு, கொடைக்கானல், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருச்செந்தூர், நெய்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, மன்னார்குடி, வேலூர் மற்றும் நாகூர் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம், செல்போன் செயலி மற்றும் இ-சேவை மையம் மூலமாக பதிவு செய்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story