அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடிமாத கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மதுரைவீரன் கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவில், திருவப்பூர், கொன்னையூர் இளஞ்சாவூர், நார்த்தாமலை ஆகிய மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாம்பணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கீரமங்கலத்தில் உள்ள ஒப்பிலாமணி அம்பிகைக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு வகையான மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்புனவாசல் வடக்கு வீதியில் உள்ள வனதுர்க்கை என்ற காட்டேரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மணமேல்குடி அருகே உள்ள வடக்கூர் முத்துமாரியம்மன் கோவில், தெற்கூர் முத்துமாரியம்மன் கோவில், சிங்க வாகனபிடாரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கட்டுமாவடி அருகே கீழகுடியிருப்பு கிராமத்தில் உள்ள அக்னி காளியம்மன், அக்னி வீரன் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினமும் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் ஆடி பவுர்ணமியையொட்டி பால் காவடி, செடல் காவடி, அக்னி காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்த சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்தனர். பின்னர் கோவில் சன்னதியில் நெய் விளக்கேற்றி அம்மனை தரிசித்து சென்றனர்.

அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிவன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வீதியுலா வந்தார். கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் உள்ள குருவிக்காரர்களின் குலதெய்வமான மதுரை வீரன், காளியம்மன், மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பொங்கல் விழா நடந்தது. நேற்று மாலை கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி கோவிலிருந்து மேளதாளம், வாணவேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் பால்குடம் எடுத்து சென்றனர். இன்று (சனிக்கிழமை) எருமை, ஆட்டுக்கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story