அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Aug 2023 7:45 PM GMT (Updated: 11 Aug 2023 7:45 PM GMT)

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேனி

ஆடி கடைசி வெள்ளி

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று, தேனி மாவட்டத்தில் உள்ள கோவல்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பிரசன்னநாயகி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் 10 ஆயிரத்து 8 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கவுமாரியம்மன் கோவில், தென்கரை காளியம்மன் கோவில், காளஹதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிமாவு உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரம்

பின்னர் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலிலும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அங்கு நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சக்கரம்மாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

போடி சுப்புராஜ் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆலயத்தில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். போடி சீனிவாச பெருமாள் கோவிலில் பத்மாவதி தாயார் அம்மாள் ரோஜாப்பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அனைத்து கோவில்களிலும் பிரசாதம், கூழ் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story