2 தனியார் பஸ்கள் மோதி 6 பேர் பலியான சம்பவம் எதிரொலி: நெல்லிக்குப்பம் பகுதியில் 12 இடங்களில் வேகத்தடைகள் அமைப்பு


2 தனியார் பஸ்கள் மோதி 6 பேர் பலியான சம்பவம் எதிரொலி: நெல்லிக்குப்பம் பகுதியில் 12 இடங்களில் வேகத்தடைகள் அமைப்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 1:49 AM GMT)

2 தனியார் பஸ்கள் மோதி 6 பேர் பலியான சம்பவத்தை தொடா்ந்து நெல்லிக்குப்பம் பகுதியில் 12 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அருகே 2 தனியார் பஸ்கள் நேற்று முன்தினம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் பலியானார்கள். மேலும் 90 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோன்று நேற்று முன்தினம் வாழப்பட்டு பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில், தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் டிராக்டர் மீது மோதியது. உடன் அப்பகுதி மக்கள் வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் பஸ்கள் மற்றும் வானகங்கள் கட்டுப்பாடின்றி வேகமாக செல்வதால் இந்த பகுதியில் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்க, தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வெகுநாட்களாக வலியுறுத்தி வருகிறார்கள்.

12 இடங்களில் வேகத்தடை

இந்த நிலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சத்யா, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் நெல்லிக்குப்பம் பகுதியில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க முடிவு செய்து ஆய்வு செய்தனர்.

இதில் மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, வெள்ளக்கேட், வரக்கால்பட்டு, நத்தப்பட்டு, ஆஞ்சநேயர் கோவில் ஆகிய பகுதிகளில் 12 இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் விபத்து நடந்த இடத்தில் முதற்கட்டமாக பெரிய அளவிலான வேகத்தடை அமைக்கும் பணி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும் 5 இடங்களில் பெரிய அளவிலான வேகத்தடையும், 6 இடங்களில் சிறிய அளவிலான வேகதடையும் என 12 இடங்களில் உடனடியாக வேகத்தடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.


Next Story