விநாயகர் சிலைகள் அக்னி தீர்த்த கடலில் கரைப்பு
ராமேசுவரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டன.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டன.
பிரதிஷ்டை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதே போல் ராமேசுவரத்திலும் இந்து முன்னணி சார்பில் பெரிய கடை வீதி, மேட்டு தெரு, எம்.ஆர்.டி நகர், சேரான்கோட்டை, ராமகிருஷ்ணபுரம், சிவகாமி நகர் உள்ளிட்ட நகரின் 21 இடங்களில் கடந்த 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டன.
இந்த நிலையில் ராமேசுவரத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று தேவர் சிலை அருகே கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து அனைத்து சிலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ஊர்வலமாக பெரிய பள்ளிவாசல் தெரு, நகர் காவல் நிலையம், ராம தீர்த்தம், திட்டக்குடி சாலை, நடுத்தெரு, மேற்கு மற்றும் வடக்கு, கிழக்கு ரத வீதி சாலை வழியாக அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
பாதுகாப்பு
தொடர்ந்து ஒவ்வொரு சிலைகளாக அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டன. இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கடலில் கரைக்கும் நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, நகர் தலைவர் நம்புராஜன், பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கதிரவன், ஐகோர்ட்டு வக்கீல் சண்முகநாதன், நகர் தலைவர் ஸ்ரீதர், நகர் பொருளாளர் சுரேஷ், ஓ.பி.சி. அணி மாவட்ட துணைத் தலைவர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் சுந்தர வாத்தியார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்சியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கரைப்பு
இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் வைக்கப் ்பட்டு இருந்த விநாயகர் சிலைகளும் அந்தந்த கடல் பகுதியில் கரைக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.