விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பிரச்சினை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பிரச்சினை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x

விநாயகர் சிலைகள் ஊர்வலம் 202 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகவும். ஊர்வலத்தில் பிரச்சினை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எச்சரித்துள்ளார்.

வேலூர்

விநாயகர் சிலைகள் ஊர்வலம் 202 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகவும். ஊர்வலத்தில் பிரச்சினை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எச்சரித்துள்ளார்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் உள்ள சில அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (இன்று) நடைபெற உள்ளது. சில அமைப்புகள் நாளை மறுதினம் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல உள்ளன. வேலூர் நகரில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு, ஊர்வலத்தின்போது பாதுகாப்பு என்று மொத்தம் 1,500 காவலர்கள், 221 பயிற்சி காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

202 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் பாதையில் 45 இடங்களில் 170 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராவில் பதிவாகும் அனைத்தையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக 24 மணி நேரமும் போலீசார் குழுவினர் பார்வையிடுவார்கள். அதைத்தவிர 4 டிரோன்கள், 18 போலீசார் தங்கள் உடலில் கேமராக்களை பொருத்தியும், 10 வீடியோ கேமராமேன் மூலமும் ஊர்வல நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு சிலையின் நகர்வையும் கூகுள் வரைப்படம், ஜியோ டேக் செய்யப்பட்டுள்ளது. சிலைகளுடன் ஊர்வலமாக செல்லும் போலீசார் அந்த சிலை தற்போது எங்கு உள்ளது என்பதை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் அனுப்பி வைப்பார்கள். அதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிலையின் நகர்வுகளை தெரிந்து கொள்ள முடியும். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 62 பேரிடம் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பிரச்சினை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழா அமைப்பாளர்கள் அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடக்க வேண்டும்.

விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பினர் மற்றும் பிற மதத்தினர்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து போலீசார் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

தொடர்ந்து அவர் வேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் நிகழ்வுகளை கட்டுபாட்டு அறையில் இருந்து பார்வையிட்டார்.


Next Story