விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மாதேஷ், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ் தலைமையில் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கெலமங்கலம் அடுத்துள்ள போடிச்சிப்பள்ளியில், ஆதிதிராவிட நலத்துறை வழங்கிய இடத்தில் 60-க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆனால் அப்பகுதிக்கு செல்ல பாதையில்லை. அப்பகுதி மக்கள் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம். இதையடுத்து கலெக்டர் போடிச்சிப்பள்ளி பகுதி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி சூளகிரி வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆனால் அவை அப்படியே சாலையில் கிடக்கிறது. சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் இதுவரை அந்த இடத்தை பார்வையிடவோ, சாலை அமைக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதே போல், வரட்டனப்பள்ளி, மாதேப்பட்டி, கொடி திம்மனஅள்ளி, தளவாய்ப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் பல்வேறு இடங்களில் நிலம் ஒதுக்கப்பட்டும் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை. எனவே, கலெக்டர் உத்தரவிட்டும் இப்பணிகளை செய்யாமல் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போடிச்சிப்பள்ளியில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பாக்யராஜ், முனிசந்திரன், பவுன்ராஜ், செல்வராஜ், சேட்டு, முரளி, விஜய் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.