திடீரென நிறுத்தப்படும் அரசு பஸ்சால் மாணவ-மாணவிகள் அவதி
திருவட்டார் அருகே திடீரென நிறுத்தப்படும் அரசு பஸ்சால் மாணவ-மாணவிகள் அவதி
திருவட்டார்,
திருவட்டார் அருகே உள்ள திருவரம்பில் இருந்து குலசேகரம், வெண்டலிக்கோடு, வலியாற்றுமுகம், முட்டைக்காடு, பத்மநாபபுரம் வழியாக தக்கலைக்கு தடம் எண் 13 ஜி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அதிகாலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த பஸ் திடீரென நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் தனியார் மினி பஸ்களும் இல்லை. இதனால், அரசு பஸ்சை எதிர்பார்த்து இருக்கும் மாணவ-மாணவிகள், தோட்ட தொழிலாளர்கள் பெரும் அவதிபடுகிறார்கள்.
இந்த பஸ் திருவட்டார் போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படுகிறது. பணிமனையில் போதிய டிரைவர்- கண்டக்டர்கள் இல்லாததால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை அனுப்ப முடிவதில்லை என கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திருவட்டார் போக்குவரத்து பணிமனையில் போதிய ஊழியர்களை நியமனம் செய்து பஸ்களை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.