சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்


சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
x

சாலைமறியல்

ஈரோடு

அந்தியூர் அருகே சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திடீர் சாலை மறியல்

அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி அந்தியூர் காலனி. இங்குள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக இங்குள்ளவர்களுக்கு குடிநீர் சுகாதாரம் இல்லாமல் வினியோகம் செய்யப்பட்டு வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்தியூர் மலைக்கருப்புசாமி கோவில் ரோட்டில் உள்ள காலனி பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி திடீர் சாலை மறியல் போராட்த்தில் ஈடுபட்டனர்.

சுகாதாரமான குடிநீர்

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சின்னதம்பிபாளையம் ஊராட்சி தலைவி சுமதி தவசியப்பன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள மேல் நிலை குடிநீர் தொட்டியில் உள்ள மூடிபோன்ற மேல் பகுதி உடைந்து விட்டது. இதனால் மழை பெய்யும்போது, மழைநீரானது குடிநீருடன் கலந்து விடுகிறது. இதன் காரணமாக குடிநீரில் புழுக்கள் போன்றவை உருவாகி விடுகிறது. இந்த குடிநீர் எங்களுக்கு வினியோகிக்கப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யவேண்டும்,' என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

அதற்கு ஊராட்சி தலைவி சுமதி தவசியப்பன் மற்றும் போலீசார் பதில் அளிக்கையில், 'சுகாதாரமான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story