போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், பழனிசாமி மற்றும் போலீசார் அணிவகுப்பு மரியாதை கொடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றி பார்வையிட்ட அவர் போலீஸ் நிலையத்தின் உள்ளே பதிவேடுகளை ஆய்வுசெய்தார். அப்போது போலீசாரின் பணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினார்.
தொடர்ந்து போலீசார் மத்தியில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேசும்போது, போலீஸ் நிலையத்துக்கு வரும் பொது மக்களிடத்தில் அன்பாக நடந்து கொண்டு துரிதமான நடவடிக்கை மேற்கொண்டு பாரபட்சமின்றி செயல்பட்டால் காவல்துறைக்கு நல்ல பெயர் வரும். இதில் போலீசார் தவறு செய்யும்போதுதான் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. போலீசார் ஒவ்வொருவரும் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் உத்தரவு இன்றி தன்னிச்சையாக செயல்படுவது குற்றமாகும். கஞ்சா, லாட்டரி, சாராயம், மணல் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடவும் கூடாது. போலீசார் தவறு செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.