நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது


நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:45 PM GMT)

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடியை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 45), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 7 ஏக்கர் விளை நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்த முகுந்தன், அதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடை செய்தார். இதையடுத்து அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக கட்டி, சி.சாத்தமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக சென்றார்.

அப்போது அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக இருக்கும் தியாகராஜனை (53) சந்தித்து, தன்னிடம் 450 நெல் மூட்டைகள் உள்ளது என்றும், அதனை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்கு தியாகராஜன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றால், ஒரு நெல் மூட்டைக்கு 55 ரூபாய் வீதம் 450 மூட்டைகளுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

மேற்பார்வையாளர் கைது

ஆனால் தனது கடின உழைப்பால் விளைந்த நெல்லுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி முகுந்தன், உடனே அதுபற்றி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்துடன் நேற்று மதியம் முகுந்தன், சி.சாத்தமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்த தியாகராஜனிடம், அந்த பணத்தை முகுந்தன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய தியாகராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story