தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு-நாளை தொடங்குகிறது
தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் ஒரே நேரத்தில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நாளை தொடங்குகிறது.
ஊட்டி
தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் ஒரே நேரத்தில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நாளை தொடங்குகிறது.
கணக்கெடுப்பு
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.
இதனால் கழுகுகள் குறித்து இதுவரை, தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே உள்ளன.
மேலும் 3 மாநிலங்களில் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 3 மாநிலங்களிலும் முதன்முறையாக ஒருங்கிணைந்த முறையில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இரு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த முத்தரப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், இரட்டை கணக்கெடுப்பை தவிர்க்க, மேற்குத் தொடர்ச்சி மலையில் முதல் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட கழுகு கணக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
4 வகையான கழுகுகள்
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 4 வகையான கழுகுகள் தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. மேலும் அவை நீலகிரி உயிர்க்கோளப் பகுதியில் குவிந்துள்ளன. முதுமலை புலிகள் காப்பகத்தின் சீகூர் பீடபூமியானது கடைசியாக எஞ்சியிருக்கும் வெள்ளை குழல் கழுகுகளை அடையாளம் காட்டும் பகுதியாக உள்ளது. இதுவரை நடந்த கணக்கெடுப்புகளில் 200க்கும் குறைவாகவே கழுகுகள் இருப்பது தெரிய வந்தது.இந்த கணக்கெடுப்பு மூலம் அவற்றின் எண்ணிக்கை மற்றும் வாழ்விடத்தை இன்னும் துல்லியமாக மதிப்பிட உதவும்.
பறவை இனங்கள் அடிக்கடி காணப்படும் நிலப்பரப்பை 10 இடங்களாகப் பிரித்து நடத்தப்படும். ஒவ்வொரு இடமும் ஒரு கழுகு நிபுணர், ஒரு வனத அதிகாரி, இரண்டு தன்னார்வலர்கள் மற்றும் ஒரு வனக் கண்காணிப்பாளர் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். தமிழகத்தில் நீலகிரி மற்றும் ஈரோட்டில் மட்டும் நடக்கிறது. முதுமலையில் 35 இடங்களில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.