அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் - விஜயகாந்த்


அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் - விஜயகாந்த்
x

உண்மையில் உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

உண்மையில் உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வறுமையால் கல்வியை தொடர முடியாமல் மகன் தற்கொலை செய்ததால் விரக்தி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி பிச்சை எடுக்கும் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரிக்கு சேர வேண்டிய ஓய்வூதிய தொகையை 6 வாரத்தில் வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த கோபால் வேளாண் உதவி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கூட்டுறவு சங்கத்தில் கடன் நிலுவையில் இருந்ததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டதோடு அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். கோபாலின் 2 மகள்களுக்கும் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் கூலி வேலைக்கு செல்கிறார்கள். இதனால் விரக்தி அடைந்த அவர், வீட்டை விட்டு வெளியேறி கோவில்களில் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். ஒரு அரசு அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அதிகாரியாக தான் அவர் இருந்திருப்பார். அதனால்தான் அவருக்கு இந்த கதி. உண்மையாக நேர்மையாக இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு இங்கு என்ன நியாயம் இருக்கிறது. வறுமையால் தனது குடும்பத்தை விட்டு விலகிய அரசு அதிகாரி ஒருவர் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளங்கையில் நெல்லிக்கனிப் போல மிக தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

COLLECTION, COMMISSION, CORRUPTION இதுதான் ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. அது தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் மிக உச்சத்தில் இருப்பதாக மக்களே பேசுகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடும் அளவுக்கு தமிழக அரசு மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது.

இனியாவது நேர்மையான அரசு அதிகாரிகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும். உண்மையில் உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும். முதியவர் கோபால் பெற்றதாக கூறப்படும் கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்து, ஓய்வூதிய தொகையை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story