பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது


பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக  தமிழ்நாடு திகழ்கிறது
x

பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை

பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார்.

கவர்னர் வருகை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு இன்று வருகை தந்தார்.

தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சாதுக்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொண்டார்.

அவரை சாதுக்கள் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியை அவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மிக பூமி. மேலும் நினைத்தாலே முக்தி தரக்கூடிய பூமியாகவும் உள்ளது. இந்த உலகத்தில் சிவபெருமான் விருப்பமின்றி எதுவும் நடக்காது.

இந்திய நாடு மற்ற நாடுகளை போல் அல்ல. மற்ற நாடுகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. இந்தியா அப்படி இல்லை. பாரத நாடு என்பது சாதுக்கள், ரிஷிகளின் தவ வலிமையினால் உருவாக்கப்பட்டது.

இந்த பிரபஞ்சம் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகள் உணர்த்தியுள்ளனர். இந்த உண்மையே சனாதன தர்மத்தின் மையமாகும். பாரத நாடு தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே இமயமலை வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.

ஆன்மிக தலைநகரம்

பாரத நாட்டில் உள்ள அனைவரும் சிவனின் குழந்தைகள். சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது அல்ல, பாரத நாட்டில் உள்ள அனைவருக்கும் உள்ளடக்கியதாகும். நான், எனது என்று இல்லாமல் நாம், நமது என்பது தான் சனாதனம் ஆகும்.

குறுகிய காலங்களாக சனாதனம் அழிவுகளை சந்தித்து வருகிறது. 1947-ல் தான் பாரத நாடு உருவானது என்று பலர் எண்ணுகின்றனர். 1947-ல் விடுதலை தான் பெற்றோம்.

தமிழகத்தில் பல பகுதிகளை நான் சுற்றி பார்த்து உள்ளேன். பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பதால் பெருமிதம் கொள்கிறேன்.

நமது நாடு ஆன்மிகத்தை தவிர்த்து வளர்ச்சியைக் கண்டால் மேற்கத்திய நாட்டின் போலி நாடாக இருக்கும். தற்போதைய காலத்தில் கல்வி, அறிவியல் போன்றவற்றில் வளர்ச்சியை கண்டு வருகிறது.

ஆன்மிக எழுச்சி

நமது நாட்டில் உள்ள ஆன்மிக எழுச்சி உலகில் உள்ள மற்ற நாடுகளிலும் வரவேற்கக் கூடியதாக உள்ளது. நமது அடிப்படை தத்துவம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே ஆகும்.

இது மட்டுமே உலகத்தை காப்பாற்றக் கூடியதாகும். சாதுக்கள் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. அனைவரையும் ஆன்மிக ஆற்றல் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். பல அரசாட்சியில் நாம் பிளவு பட்டு இருந்தாலும் ஆன்மிகத்தால் ஒன்றாக உள்ளோம்.

அசைவ உணவை விருப்பப்பட்டு சாப்பிடுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். அதற்கு கிரிவலப் பாதை உகந்த இடமில்லை. கிரிவலப் பாதையில் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கு உண்டான தன்னால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

நாம் அனைவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. அது என்னவென்றால் மக்கள் அனைவரையும் ஆன்மிக ஆற்றல் உடையவர்களாக உருவாக்குவது. சாதுக்களாகிய உங்களது பணியானது ஆலயத்திலோ, ஆசிரமத்திலோ முடிந்து விடக்கூடாது.

சமுதாயத்தில் பரந்து விரிய வேண்டும். சென்னை ராஜ் பவனத்தில் பாரதியார் மண்டபம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவருக்கும் மிகப்பெரிய ஒரு பொறுப்பு உள்ளது.

இந்த இளைய சமுதாயத்தை நமது பாரதத்தின் ஆணிவேரான ஆன்மிகத்தை உணர்த்தி அதன் ஆற்றலை உலகமெங்கும் பரவச் செய்ய வேண்டிய பொறுப்பினை நாம் அனைவரும் ஏற்று செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோரிக்கைகள்

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு ஆசிரமங்களின் நிர்வாகிகள் பேசுகையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கிரிவலப்பாதை ஆணாய்பிறந்தான் பகுதியில் உள்ள சோனாநதி தீர்த்த குளத்தை தூர்வார வேண்டும்.

கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் நெருங்கி கூட்டமாக செல்வதால் இடையூறு இல்லாமல் செல்ல மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் கிரிவலப்பாதையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அன்னதானம்

அதைத்தொடர்ந்து கவர்னருக்கு சாதுக்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் சாதுக்களுக்கு கவர்னர் அன்னதானம் வழங்கினார்.


Next Story