கிருஷ்ணா நதி நீர் திறப்பு அளவை அதிகரிக்க வேண்டும் ஆந்திராவுக்கு, தமிழக நீர்வளத்துறை கோரிக்கை


கிருஷ்ணா நதி நீர் திறப்பு அளவை அதிகரிக்க வேண்டும் ஆந்திராவுக்கு, தமிழக நீர்வளத்துறை கோரிக்கை
x

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் உள்ள பற்றாக்குறையை ஈடுகட்ட, வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை, திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு தமிழக நீர்வளத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை

ஊத்துக்கோட்டை,

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடியில் (11.75 டி.எம்.சி.) நேற்றைய நிலவரப்படி 6 ஆயிரத்து 872 மில்லியன் கன அடி (6.8 டி.எம்.சி.) அதாவது 58.45 சதவீதம் சேமிப்பை கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை கண்டலேறு பூண்டி கால்வாயின் நுழைவுப் பகுதியில் இந்த வாரம் வினாடிக்கு 100 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகள் மற்றும் வீராணம் ஏரி ஆகியவற்றில் தற்போது இருக்கும் நீர் அடுத்த 6 அல்லது 7 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும். சராசரியாக சென்னைக்கு குடிநீர் மற்றும் தொழில்துறை மற்றும் மொத்த நுகர்வோர்களுக்கு ஒரு நாளைக்கு 1,031.85 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை நீர் சேமிப்பை சமன் செய்ய அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. குறிப்பாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டால் ஒரு மாதத்திற்கு ஆயிரம் மில்லியன் கன அடி (1 டி.எம்.சி.) தேவைப்படுகிறது. இது நீர்த்தேக்கங்களில் சேமிப்பை பராமரிக்க உதவும். அத்துடன் மழைக்காலம் வரைக்கும் சிரமமின்றி நீர் திறக்கமுடியும்.

முதல் தவணையான கடந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து கடந்த 16-ந்தேதி வரை உள்ள நாட்களில் 1,102 மில்லியன் கன அடி (1.1 டி.எம்.சி.) மட்டுமே கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு கிடைத்து உள்ளது. ஆனால் கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தத்தின் படி முதல் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. நீர் வழங்கவேண்டும்.

சென்னைக்கு நீர் திறந்து விடும் அளவிற்கு கண்டலேறு நீர்த்தேக்கத்தில் 15.790 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இருந்தாலும் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையால் நீர்த்தேக்கங்கள் நிரம்பும் நிலை உள்ளது. எனவே அதிக அளவு கிருஷ்ணா நீரை வழங்க வலியுறுத்தவில்லை' என்றனர்.


Next Story