டாஸ்மாக் ஊழியர்கள், விவசாய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள், விவசாய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2023 7:02 PM GMT (Updated: 21 Jun 2023 12:24 PM GMT)

திருச்சி, கல்லக்குடி, பொன்மலையில் டாஸ்மாக் ஊழியர்கள், விவசாய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி, கல்லக்குடி, பொன்மலையில் டாஸ்மாக் ஊழியர்கள், விவசாய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் ஊழியர்கள்

சி.ஐ.டி.யு. திருச்சி மண்டல டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ஜெயபால், ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் பணியிட பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தவேண்டும், டாஸ்மாக்கை கேரளாவைப்போல் கணினிமயமாக்கி வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், சமூக வலைதளங்களில் வரும் செய்திகளைக் கொண்டு விசாரணை இன்றி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாய தொழிலாளர்கள்

இதேபோல் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் கல்லக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க ஒன்றிய துணை தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளரும், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வுமான எம்.சின்னத்துரை கண்டன உரையாற்றினார்.

இதில் திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பேரூராட்சி செயல்அலுவலர் குணசேகரனிடம் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டி 520 மனுக்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் மனுக்களை பெற்றுகொண்டு உயர்அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து உரியநடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

திருச்சி பொன்மலை ெரயில்வே மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச தின கூலியாக ரூ.616 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவர் மாறன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில் ெரயில்வே மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என சி.ஐ.டி.யு.வினர் தெரிவித்துள்ளனர்.


Next Story