ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த `டீ மாஸ்டர்' தூக்குப்போட்டு தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த `டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மணப்பாறை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த `டீ மாஸ்டர்' தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி

மணப்பாறை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த `டீ மாஸ்டர்' தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டீ மாஸ்டர்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சவேரியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வில்சன் (வயது 26). இவருக்கு திருமணமாகி மனைவியும், 1½ வயதில் ஒரு மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

வில்சன் வையம்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று அதிகாலையில் வில்சன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டம்

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வில்சன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இறந்த வில்சன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கி உள்ளார். பின்னர் அவர் தொடர்ந்து விளையாடியதால் அதற்கு அடிமையானார்.

இதில், அதிக அளவில் பணத்தை இழந்ததாக தெரிகிறது. ஆனாலும் அவர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் வருமானத்தை மீறி அதிக அளவில் கடன் வாங்கினார். இதைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டு வந்தனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

4-வது சம்பவம்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வாத்தலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த ஆனந்த் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்துள்ளார். இதேபோல் கடந்த 2022-ம் ஆண்டு மணப்பாறையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 25-ந்தேதி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் தற்கொலை செய்து கொண்டார். தற்போது, மணப்பாறை அருகே வில்சன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியாகி உள்ளார். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4 பேர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை வருமா?

தமிழகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி பணத்தை இழந்து பலியாகி உள்ளதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும். மத்திய அரசு அந்த மசோதாவை சட்டமாக இயற்ற அனுமதி வழங்கிட வேண்டும். அதன்மூலம் சூதாட்டத்துக்கு உயிர்ப்பலி ஏற்படுவது தடுக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story