திருவள்ளூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை; 4 பேர் கைது


திருவள்ளூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை; 4 பேர் கைது
x

திருவள்ளூர் அருகே வாலிபரை அடித்துக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த தொட்டிக்கலை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் வேலு (வயது 30). வெல்டர். இவர் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வேலுவை அவருடைய நண்பர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து செவ்வாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலையாளிகளை பிடிக்க ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த செவ்வாப்பேட்டை போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் வெல்டர் வேலுவை கொலை செய்த செல்வா மற்றும் ஸ்டாலின் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கோகுல் (வயது 21) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே கோகுல் தொட்டிக்கலை பொன்னியம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக அறிந்த வேலுவின் நண்பர்கள் சிலர் கோகுலின் தலையில் சிமெண்ட் கல்லை கொண்டு அடித்துக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் கோகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரித்து வந்தனர்.இந்நிலையில் கோகுல் கொலை வழக்கில் வேலுவின் நண்பர்களான அயத்தூர் கிராமத்தை சேர்ந்த அஜித் (22), வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சதிஷ் (19) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை செவ்வாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


Next Story