பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்


பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்
x
திருப்பூர்

போடிப்பட்டி:

உடுமலை பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வாழ்க்கை சுழற்சி

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ள நிலையில் மயில்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் எலிகளை பாம்புகள் கட்டுப்படுத்துகின்றன. பாம்புகளின் எண்ணிக்கை மயில்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மயில்களின் எண்ணிக்கையை குள்ளநரிகள், காட்டுப்பூனைகள் போன்ற சிறு விலங்குகள் கட்டுப்படுத்தி வந்தன. ஆனால் இந்த வாழ்க்கைசுழற்சி முறை தற்போது மாறி விட்டது. பெருகி வரும் குடியிருப்புகள் மற்றும் நவீன கட்டமைப்புகளால் நரிகள் மற்றும் காட்டுப்பூனைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு விட்டது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து அரிதிலும் அரிதானதாக மாறிவிட்டது.

விதைகளைத் தின்னும் மயில்கள்

தேசியப்பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள மயில்களை மனிதர்கள் வேட்டையாடவோ, பிடித்து அடைக்கவோ முடியாது. இதனால் மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவை பாம்புகளை அதிக அளவில் வேட்டையாடுவதால் எலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் கூட்டம், கூட்டமாக நுழையும் மயில்கள் மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட தானியங்களை தின்று சேதப்படுத்துகிறது. வாளவாடியிலுள்ள விவசாயி நடராஜன் என்பவரது தோட்டத்தில் பாரம்பரிய ரகமான தூய மல்லி நெல் இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மயில்கள் நெல் மணிகளை தின்று சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் கூட்டமாக வயலில் உருண்டு பெருமளவு நெற்கதிர்களை மண்ணோடு மண்ணாக்கி விடுகிறது.

நிலக்கடலை

விளைச்சலை வீணாக்குவது ஒரு புறமிருக்கும் நிலையில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர் சாகுபடியின் போது விவசாயிகள் விதைத்த விதைகளையே மயில்கள் தோண்டித்தின்று விடுகிறது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலேயே பயிர்கள் முளைப்பதால் பெருமளவு மகசூல் குறைகிறது. கண் முன்னே சேதப்படுத்தும் மயில்களை சத்தமெழுப்பி மட்டுமே விரட்ட வேண்டிய நிலை உள்ளது. சிறு கல்லை வீசினால் கூட சில வேளைகளில் மயில்கள் உயிரிழக்க கூடும். அப்போது விவசாயிகள் குற்றவாளிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.

எனவே மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வனத்துறை மூலம் அரசு திட்டம் வகுக்க வேண்டும். இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகள் சிக்கித்தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காட்டுப்பன்றிகள், மயில்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் விவசாயிகளை வேதனையடைய செய்கிறது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story