என்.எல்.சி.யை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கை ஏற்புடையதல்ல


என்.எல்.சி.யை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கை ஏற்புடையதல்ல
x
தினத்தந்தி 29 July 2023 6:45 PM GMT (Updated: 29 July 2023 6:46 PM GMT)

என்.எல்.சி.யை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கை ஏற்புடையதல்ல என கடலூரில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர்

பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை ராமேசுவரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் உள்ள நிலையில், அமித்ஷா எதற்கும் பிரயோஜனம் இல்லாத பாதயாத்திரைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார். மணிப்பூரில் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதற்கு காரணம் பா.ஜ.க. தான். தமிழையும், இலக்கியங்களையும், திருக்குறளையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமித்ஷாவின் பேச்சு உள்ளது. பிரதமர் மோடி மீது சுமார் 50 பக்க ஊழல் குற்றச்சாட்டுகளை என்னால் வெளியிட முடியும். இந்தியாவிலேயே பெருத்த ஊழல்வாதிகளாக இருக்கக்கூடியவர்கள் பா.ஜ.க.வினர். அவர்கள் தமிழ்நாட்டில் புனிதர் வேஷம் போடுவது என்பது எடுபடாது.

என்.எல்.சி. மீது குற்றச்சாட்டு

நெய்வேலி நிறுவனத்தில் நிலம் எடுக்கும் பிரச்சினை தொடர்பாக பா.ம.க. போராட்டம் நடத்தி, அதில் கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயிகளிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நிலம் எடுத்து 50 ஆண்டுகளுக்கும் மேலான விஜயமாநகரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. வருடத்திற்கு ரூ.1500 கோடி லாபம் சம்பாதிக்கும் என்.எல்.சி. நிறுவனம் ரூ.200 கோடியை விவசாயிகளுக்கு தாராளமாக செலவு செய்யலாம்.

பா.ம.க.வின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல

அதனால் என்.எல்.சி. நிறுவனம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளின் கோரிக்கையை சட்டத்திற்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்காக போராடும் பாட்டாளி மக்கள் கட்சியின், என்.எல்.சி. நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல. என்.எல்.சி.யால் மணிக்கு 3500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தை மூடினால் மின்சாரத்தை தனியாரிடம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். நெய்வேலி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதால், பாதுகாக்கப்பட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் என்.எல்.சி. நிறுவனத்தை அப்புறப்படுத்துவதோ, இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையையோ ஏற்க முடியாது. அது பல்வேறு விதமான சமூக நெருக்கடிகளையும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஒரு தடைக்கல்லாக அமையும். போராட்டங்கள் நடைபெறுவது அதில் தலைவர்கள் கைது செய்யப்படுவது, பின்னர் மாலையில் விடுவிக்கப்படுவது என்பது இயல்பான நடைமுறைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story