ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது ரெயில்வே ஊழியரின் கால் துண்டான பரிதாபம்


ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது ரெயில்வே ஊழியரின் கால் துண்டான பரிதாபம்
x
தினத்தந்தி 28 May 2022 3:54 PM GMT (Updated: 28 May 2022 3:56 PM GMT)

திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது ரெயில்வே ஊழியரின் கால் துண்டான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் புஷ்பாநகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 37). இவர், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஊழியராக உள்ளார். விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற இவர், திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பயண களைப்பில் அவர் தூங்கிவிட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே ரெயில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தை அடைந்தது. ஆனால் அவர் தூக்கத்தில் இருந்து எழவில்லை. இதற்கிடையே ரெயில் புறப்பட்டு திண்டுக்கல் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள ஒத்தக்கண் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விழித்த வினோத்குமார், திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்து ரெயில் செல்வதை அறிந்து பதற்றமடைந்தார். உடனே அவர் ரெயிலை விட்டு இறங்க முயன்றார். அப்போது நிலைதடுமாறிய வினோத்குமார் கீழே விழுந்தார். இதில் அவருடைய இடதுகால் ரெயில் சக்கரத்தில் சிக்கி துண்டானது. இதனால் அவர் வலியால் அலறிதுடித்தார்.

இதனை பார்த்த சக பயணிகள், திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த வினோத்குமாைர மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story