கலெக்டர் அலுவலகத்தில் சகோதரர்கள் திடீர் தர்ணா
நிலத்தை அளந்து தரக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சகோதரர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட 443 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
வேலூர் கோட்டை பெரியார் பூங்காவை திறப்பதற்கான போராட்ட குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் வேலூர் கோட்டை. இங்குள்ள பெரியார்பூங்கா வேலூர் நகர வாசிகளின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து வந்தது. தற்போது அந்த பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொழுதுபோக்க வேறு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பூங்கா இயங்கி வந்த காலத்தில் அதனை நம்பி பல சிறு, குறு தொழில்கள் செய்து வந்தவர்கள் பலர் தங்களின் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். எனவே மூடப்பட்ட பெரியார் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
தேசிய குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அளித்துள்ள மனுவில் நாங்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 சிறப்பு பயிற்சி மையங்களில் பணியாற்றி வருகிறோம். இப்பயிற்சி மையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையங்கள் வருகிற 31-ந் தேதிக்குள் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடகை தொகை மற்றும் எங்களுக்கு நிலுவையில் உள்ள 21 மாத மதிப்பூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர்நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். அகற்றாவிட்டால் எங்களது குடும்பஅட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று கூறி உள்ளனர்.
வேலூர் தொரப்பாடியை சேர்ந்த சாந்தி என்பவர் அளித்துள்ள மனுவில், எனது மகளுக்கு 11 வயது ஆகிறது. அவள் பிறவியில் மனவளர்ச்சி குன்றியவர். இதற்கான சான்று பெற்று உதவித்தொகை பெற்று வந்தேன். இந்தநிலையில் சான்று புதுப்பித்தலின்போது எனது சான்று தவறாக வழங்கப்பட்டதால் அவளுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உதவித்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தர்ணா போராட்டம்
குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் அரங்கம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களுக்கு சொந்தமான நிலம் சேம்பள்ளி பஞ்சாயத்தில் உள்ளது. எங்களது தந்தை இறந்துவிட்டார். எனவே பூர்விக நிலத்தை அளந்து தர வேண்டும் என்று குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தோம். எனினும் நடவடிக்கை இல்லை. எனவே எங்களது நிலத்தை அளந்து தர வேண்டும் என்று கூறினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் மனு அளித்துவிட்டு சென்றனர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.