அடகு நகையை உரிமையாளருக்கு நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும்


அடகு நகையை உரிமையாளருக்கு நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும்
x

அடகு நகையை உரிமையாளருக்கு நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

உருக்கி விற்றதாக தகவல்

அரியலூர் வட்டம், குரும்பஞ்சாவடி, செந்துறை சாலையில் யூனிக் மொபைல் ஷோரூம் நடத்தி வருபவர் தேவராஜ் (வயது 35). இவர் தனக்கு சொந்தமான 288.54 கிராம் நகைகளை, வி.ஜி.என். கோல்ட் டெஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தில் அரியலூர் கிளையில் அடமானம் வைத்து ரூ.12 லட்சத்து 7 ஆயிரத்து 546 கடன் பெற்றுள்ளார். மூன்று மாதத்திற்குள் அசல், வட்டி தொகையை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அடகு சீட்டை, அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

இதையடுத்து 3 மாதத்துக்கு முன்பாகவே அந்த நிறுவனத்தை அணுகி, அசல் மற்றும் வட்டி தொகையை செலுத்த தயாராக இருப்பதாக தேவராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் நிறுவனத்தின் அரியலூர் கிளை மேலாளர் அஜித்குமார்(25) சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் மதுரையில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாராயணனை(40) தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த நகைகள் உருக்கி விற்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோர்ட்டில் வழக்கு

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், அந்த நிறுவன உரிமையாளர் மற்றும் கிளை மேலாளர் மீது இணையதளம் மூலம் போலீசில் புகார் அளித்ததோடு, வக்கீல் மூலம் அறிவிப்பும் அனுப்பியுள்ளார். அதற்கு அந்த நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டு இருந்த நகைகளை மீட்க தாங்கள் ரூ.10 லட்சம் நிதி உதவி செய்து, நகைகளை மீட்டு விற்பனை செய்து, மீதி தொகையை தேவராஜிக்கு வழங்கி விட்டோம் என்று, தனியார் நிறுவனத்தினர் வக்கீல் மூலம் பதில் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடன் மற்றும் அதற்குரிய வட்டியை பெற்றுக்கொண்டு ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது தங்க நகைகளை தனக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும், காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே தங்க நகைகளை விற்று, தவறான பதில் கொடுத்த தனியார் நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 4-ந் தேதி தேவராஜ், அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 2-ந் தேதி முதல் விசாரணைக்கு வந்தபோது வக்கீல் மோகனை, சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆணையம் நியமித்தது. இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தீர்ப்பு

இந்நிலையில் சமரச அறிக்கையின்படி, நேற்று ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, வருகிற 15-ந் தேதிக்குள் தேவராஜ் பெற்ற கடன் மற்றும் வட்டி ரூ.13 லட்சத்து 28 ஆயிரத்து 300-ஐ தனியார் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும். பணத்தை பெற்றுக் கொண்டவுடன் அந்த நிறுவனமானது 288.54 கிராம் நகைகளை தேவராஜுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு வழக்கின் செலவுத் தொகையாக தனியார் நிறுவனம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 35 நாட்களில், முதல் விசாரணை ஏற்பட்டு 5 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story