மாடு முட்டி வாலிபர் பலி


மாடு முட்டி வாலிபர் பலி
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:46 PM GMT)

ஓசூர் அருகே எருது விடும் விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் மாடு முட்டி பலியானார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே எருது விடும் விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் மாடு முட்டி பலியானார்.

எருது விடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே திம்மசந்திரம் கிராமத்தில் சப்பலம்மா கோவில் திருவிழா கடந்த 20 நாட்களுக்கு முன் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளன்று, எருது விடும் விழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது.

இதனிடையே கடந்த 2-ந் தேதி கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் திம்மசந்திரத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

கூட்டத்தில் மாடு புகுந்தது

இந்த நிலையில், திம்மசந்திரம் கிராமத்தில் அரசு விதிமுறை மற்றும் பாதுகாப்புடன் எருது விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து ஓசூர் திம்மசந்திரம் பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.

இதில் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டு இருந்தன. மேலும் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் துள்ளிக்குதித்து மைதானத்தில் பாய்ந்து சென்றன. அப்போது மாடு பிடி வீரர்கள் காளைகளை பிடிக்க முயன்றனர். ஆனால் வீரர்களிடம் சிக்காமல் காளைகள் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தன. அப்போது சீறிப்பாய்ந்து சென்ற ஒரு மாடு கூட்டத்தில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கூட்டத்தில் இருந்து சிதறி ஓடினர்.

வாலிபர் சாவு

அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு மாடு வேடிக்கை பார்க்க வந்திருந்த வாலிபரை முட்டி தள்ளியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓசூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் சூளகிரி அருகேயுள்ள ஆருப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி மஞ்சுநாத் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

10 பேர் படுகாயம்

மேலும் எருது விடும் விழாவில் மாடு முட்டி கெலமங்கலத்தை சேர்ந்த உசேன் (20) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எருதுவிடும் விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story