மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும்- கனிமொழி எம்.பி
திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் போல இம்முறையும் முக்கிய பங்காற்றும் என கனிமொழி எம்.பி கூறினார்.
சென்னை,
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. நேற்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூடிய நிலையில் இன்று தேர்தல் அறிக்கை குழு கூடியது.
திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, எம்எல்ஏக்கள் எழிலரசன், எழிலன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி கூறியதாவது; "திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் போல இம்முறையும் முக்கிய பங்காற்றும். முதற்கட்டமாக செல்ல உள்ள இடங்களின் பட்டியல் குறித்து ஆலோசித்தோம். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக எந்தெந்த இடங்களுக்கு செல்கிறோம் என்பது பற்றிய பட்டியல் தயாரித்து விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க உள்ளோம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொது மக்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்க உள்ளோம். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும். திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை கதாநாயகியாக கூட இருக்கலாம்." என்றார்.