பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணை கரைகளை மேம்படுத்த வேண்டும்


பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணை கரைகளை மேம்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:46 PM GMT)

பூம்புகார் அருகே பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணை கரைகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் அருகே பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணை கரைகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் நீர்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே பழையகரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதி கடற்கரை அருகே உள்ளது. இதனால் இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த கிராமத்தின் வழியாக செல்லும் காவிரி ஆற்றின் வழியாக கடல் நீர் அடிக்கடி உட்புகுந்து தேங்கி விடுகிறது. இதனால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலையூர் சட்ரஸ் வரை கடல் நீர் சென்று விடுகிறது.

குறிப்பாக பழையகரம், வானகிரி, ஏராம்பாளையம், கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், மேலையூர், சாயாவனம், பல்லவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறி மேற்கண்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

தடுப்பணை

இதனால் விவசாயிகள் தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2018 -ம் ஆண்டு ரூ.8 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக காவிரி ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் தன்மை மாறி சுவையான நீராக மாறி உள்ளது. இதை பயன்படுத்தி மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் விவசாயிகள் பருத்தி மற்றும் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பழையகரம் காவிரி ஆற்றின் தடுப்பணை கரைகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலுப்படுத்த வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

சுமார் 8 கிராம மக்களின் நீண்ட நாள் கனவான தடுப்பணை காவிரி ஆற்றில் கட்டப்பட்டு, சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் மிகவும் எளிதாக கிடைக்கிறது. இந்த பகுதியில் இருந்து கடற்கரை கிராமமான வானகிரி மீனவர் கிராமத்துக்கு பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த தடுப்பணை கரைகள் வலுவிழுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக குறைவான தண்ணீரே தேக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. தடுப்பணையில் முழுமையான அளவுக்கு தண்ணீரை தேக்க வசதியாக கரைகளை வலுப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் 4 இடங்களில் ஷட்டர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story