மளிகைக்கடை தீயில் எரிந்து நாசம்


மளிகைக்கடை தீயில் எரிந்து நாசம்
x

திசையன்விளையில் மளிகைக்கடை தீயில் எரிந்து நாசமானது. இதில் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை மணலிவிளையை சேர்ந்தவர் நந்தகோபால். இவருடைய மகன் தட்சணாமூர்த்தி (வயது 32). இவர் செல்வமருதூர் சிவன் கோவில் பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு கடை பின்புறம் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவு 2 மணி அளவில் அந்த பகுதியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு, அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் துரை என்பவர் வெளியில் வந்து பார்த்தார். அப்போது தட்சணாமூர்த்தியின் மளிகைக்கடை தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தட்சணாமூர்த்திக்கு தகவல் கொடுத்தார். மேலும் இதுபற்றி திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

இச்சம்பவம் குறித்து தட்சணாமூர்த்தி, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் நடந்த கடை முன்புள்ள இரும்பு கிரில் வெளியே தீ குச்சிகள் கிடந்தது. எனவே மர்மநபர்கள் யாரேனும் கடைக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.


Next Story