80 இடங்களில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!


80 இடங்களில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!
x
தினத்தந்தி 24 Nov 2022 4:42 AM GMT (Updated: 24 Nov 2022 5:07 AM GMT)

பொது விநியோகத்திட்டத்திற்கு பாமாயில் மற்றும் பருப்பு சபளை செய்யும் 2 குழுமங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து தமிழகத்தில் 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்திற்கு (ரேஷன் கடைகளுக்கு) பாமாயில், பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை சில நிறுவனங்கள் வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சென்னை, மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் என்ற பெயரில், பருப்பு, எண்ணெய் பொருட்கள் உள்பட உணவுப்பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண் கோ உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடு தொடர்புடைய இடங்கள் என தமிழகம் முழுவதும் 80 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தது.

இந்தநிலையில் பொது விநியோகத்திட்டத்திற்கு பாமாயில் மற்றும் பருப்பு சப்ளை செய்யும் 2 குழுமங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் 2-வது முறையாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் செய்ததில் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டி இருந்தன. இந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story