24 லட்சம் பேர் எழுதும் 'நீட்' தேர்வு நாளை நடக்கிறது


24 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு நாளை நடக்கிறது
x

தமிழகத்தில் நீட் தேர்வை 1½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

சென்னை,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்தவகையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு, நாளை (மே 5-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9-ந் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் 1½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வானது, நாடு முழுவதும் 557 நகரங்களில் நடைபெறுகிறது.

நீட் தேர்வானது, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை (3 மணி 20 நிமிடம்) நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 13 மொழிகளில் தேர்வானது நடைபெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும், மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகை தரவேண்டும் என்றும், கடைசி நேர பதற்றங்களை தவிர்க்க, மாணவர்கள் முன்கூட்டிய வீடுகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு புறப்பட வேண்டும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தி உள்ளது. 'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட்களில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு நடைமுறைகள் தொடர்பாக, https://neet.ntaonline.in என்ற இணையதளத்தில் அறியலாம்.


Next Story