நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் ஆய்வு:தாமதமாக வந்த பொறியாளரை கண்டித்த அதிகாரி


நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் ஆய்வு:தாமதமாக வந்த பொறியாளரை கண்டித்த அதிகாரி
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அதிகாாி ஆய்வின் போது தாமதமாக வந்த பொறியாளரை கண்டித்தாா்.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா வருகை தந்தார்.

பின்னர் அவர் நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணனுடன் சென்று, நகராட்சி அலுவலகம் பின்புறம் ரூ.45 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம், பூலோகநாதர்கோவில் எதிரில் குளம் தூர்வாரப்பட்டதையும், நகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் புதிதாக குளம் அமைப்பதற்கான இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதையடுத்து ராமுதெரு, அண்ணாமலைநகர், ஸ்ரீவாரிநகரில் சாலை அமைக்கும் பணி மற்றும் தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மகேஸ்வரி, துப்புரவு அலுவலர் சக்திவேல், நகராட்சி எழுத்தர் பாபு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் மண்டல இயக்குனர் சசிகலா ஆய்வு செய்த போது, அங்கு பொறியாளர் பாண்டு வரவில்லை. இதனால் அங்கிருந்த அலுவலர்களிடம், ஏன் அவர் பணிக்கு வரவில்லையா, எத்தனை மணிக்கு வேலைக்கு வருவார் என்று பல்வேறு கேள்விகளை கேட்டார். அவரிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும் என்று ஆணையாளருக்கு அறிவுறுத்தினார். அப்போது காலதாமதமாக பொறியாளர் பாண்டு வந்தார். இதை பார்த்த மண்டல இயக்குனர் சசிகலா, அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி கண்டித்தார். இந்த சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story