சாலையின் குறுக்கே லாரியை நிறுத்திய உரிமையாளர்


சாலையின் குறுக்கே லாரியை நிறுத்திய உரிமையாளர்
x

சாலையின் குறுக்கே லாரியை உரிமையாளர் நிறுத்தினார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

பேரீச்சம் பழம் ஏற்றிச்சென்ற லாரி

ஆந்திர மாநிலம், நாயுடு பேட்டையில் இருந்து பேரீச்சம் பழங்களை ஏற்றிக்கொண்டு திருச்சி பால் பண்ணைக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை, அதன் உரிமையாளர் திருவண்ணாமலை மாவட்டம், கணேசபுரத்தை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் பாலாஜி (வயது 34) என்பவர் ஓட்டினார்.

நேற்று காலை 10.15 மணியளவில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, போக்குவரத்து விதிமுறைகளை மீறி அந்த லாரி இயக்கப்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்ஸ்பெக்டரிடம் பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டு லாரியை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த லாரியும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையே சுமார் ½ மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.


Next Story