தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்
சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மணிமண்டபம்
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட முத்துத்தாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய மூவர்களின் நினைவை போற்றும் வகையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழிசை மூவர் மணிமண்டபம் அமைக்கப்பட்டு அதில் அவர்களுக்கு வெண்கல சிலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபம் முறையாக பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழிசை மூவர் மணிமண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழிசை மூவர் மணிமண்டபத்தை சீரமைக்க ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசு தமிழ் மொழியை வளர்த்தவர்களுக்கும், சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றும் வகையிலும் மணிமண்டபம், நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.
அடிப்படை வசதிகள்
இந்த தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கப்பட்டு எதிர்காலங்களில் மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக இங்கு வந்து படிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன் உள்பட உடனிருந்தனர்.