வீடு புகுந்து திருடிய வாலிபர் பிடிபட்டார்
வீடு புகுந்து திருடிய வாலிபர் பிடிபட்டார்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நெற்குப்பை கண்மணி நகரை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியின் மகன் அருண்குமார் (வயது 23). நேற்று காலையில் தாயும், மகனும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மதியம் பூட்டியிருந்த வீட்டில் இருந்து மர்மநபர் வெளியே வந்தார். இதைபார்த்து சந்தேகம் அடைந்த பொது மக்கள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் சேலம் மாவட்டம், பெருமாபாளையம், மாரியம்மன் கோவிலை சேர்ந்த வேணுகோபால் மகன் சண்முகம் (32) என்றும், பரமேஸ்வரி வீட்டின் பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரத்தை திருடி கொண்டு வெளியே வந்தபோது பொதுமக்களிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த நகை, பணத்தை பொதுமக்கள் கைப்பற்றினர். பின்னர் அதனை வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.